தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா முன்வைக்கும் விமர்சனங்களை முற்றிலுமாகப் புறந்தள்ளுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கரூரில் மக்கள் உயிரிழந்த போது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம் என்னை ‘அறிவாளி இல்லை’ என்று பேசுவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என அவர் சாடியுள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனைக்கு எதிரே, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இரண்டு புதிய பேருந்து நிழற்குடைகளை இன்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்த பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக மற்றும் அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் சுளீர் பதிலடி கொடுத்ததுடன், சென்னையில் நடைபெற்று வரும் முக்கியக் கட்டமைப்புப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்தும் விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கிண்டி கத்திப்பாரா ஆலந்தூர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனைக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் 3,000 முதல் 4,000 பேர் வரை வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காகச் சைதாப்பேட்டை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு புதிய பேருந்து நிழற்குடைகளைத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “கிண்டி பேருந்து நிறுத்தம் விரைவில் ₹93 லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படவுள்ளது; மேலும், இப்பகுதியில் குழந்தைகளுக்கான மிகப்பெரிய சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தன்னை விமர்சிப்பது குறித்துப் பேசுகையில், “ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்களை நான் புறம் தள்ளுகிறேன். கரூரில் 41 பேர் இறந்த போது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த அறிவாளிகள் எல்லாம், இன்று என்னை அறிவாளி இல்லை எனப் பேசுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை” என ஆவேசமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் விமர்சனம் குறித்துப் பேசுகையில், “தமிழகப் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடக் கூடாது என்று ப.சிதம்பரம் போன்ற வல்லுநர்களே விளக்கிவிட்டனர்; அவர்களது பேட்டியைப் பார்த்து அன்புமணி உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும்” என்றார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் புகார்களுக்குப் பதிலளித்த அவர், “எடப்பாடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை அவரே சிந்தித்துப் பார்த்தால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது என்பது புரியும்” எனத் தெரிவித்தார். மேலும், சைதாப்பேட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இரும்பு மேம்பாலப் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அதனைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் உறுதிபடக் கூறினார்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!