திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் வடமேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மரபுகளை உடைத்து, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ரவி மீது தமிழக அரசு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் கவர்னர் மாளிகையை நடத்திக்கொண்டு, மண்ணின் உணர்வுகளைச் சீண்டும் ஆளுநருக்கு உளவியலில் ஏதோ கோளாறு இருப்பதாகவே தோன்றுகிறது என வைத்தார். மேலும், மகாராஷ்டிர ஹஜ் கமிட்டியில் முஸ்லிம் அல்லாதவரை நியமித்திருப்பதும், வக்பு வாரிய சட்டத் திருத்தங்களும் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக அரசின் வியூகம் என்றும் அவர் சாடினார்.
அதிமுக மற்றும் அமெரிக்க அதிபர் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அன்சாரி, கடந்த தேர்தலில் திமுகவின் அறிக்கையைக் கேலி செய்த அதிமுகவினர், இப்போது அதையே காப்பியடித்துப் பின்பற்றி வருகின்றனர். அதேபோல், அமெரிக்க மக்கள் ஒரு மனநோயாளியை அதிபராகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். அவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரைப் போலச் செயல்பட்டு மூன்றாம் உலகப்போரைத் தூண்டுகிறார் என விமர்சித்தார். தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிலான சரியான திசையில் பயணிப்பதாகவும், வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘வாகை சூடும்’ என்றும் அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். இறுதியாக, த.வெ.க தலைவர் விஜய் ஜனநாயகப் படச் சர்ச்சை குறித்துக் கருத்துச் சொன்ன பிறகு தாம் பதிலளிப்பதாகக் கூறிப் பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது ஆண்டின் முதல் கூட்டத்தொடர்!
இதையும் படிங்க: “வெனிசுலா இனி அமெரிக்கத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கும்!” டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!