மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொழிக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட தீரமிக்க தொண்டர்களின் கோட்டம் இது என்றும் இப்போதும் அதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு இந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது எனவும் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, இந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்றும் கூறினார்.
தமிழ்மொழியின் மீது இந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து போட்டு வருகிறது என கூறியுள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு என உறுதிபட கூறினார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதிலிருந்து உதிர்ந்த இலை, தழை, சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.க.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கஞ்சா தமிழகம்... சீரழியும் சமூகம்..! மீண்டும் உங்கள் ஆட்சியா? நயினார் கண்டனம்..!

மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் தி.மு.க.வினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்ற முதல்வர் ஸ்டாலின், பாசிசப் படையை எதிர்க்கும் சமூகநீதி, ஜனநாயகப் படையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது என்றார். அதற்கான முரசு கொட்டும் நிகழ்ச்சியாக, ஜனவரி 20-ஆம் நாள் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன என்றார்.
மக்களிடம் வீடு வீடாகப் பரப்புரை செய்யும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பிலான மகளிர் குழுவினரின் பயணம் ஒவ்வொரு பாகத்திலும் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறவுள்ளது.‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்‘ எனத் தொகுதிகள் தோறும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளன. அத்துடன், ஜனவரி 26 அன்று டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் மாநாடு எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 7-ஆம் நாள் விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் கழக இளைஞர்கள் அணிவகுக்க ஆயத்தமாகிவிட்டனர். மகளிர் படையையும், இளைஞர் பட்டாளத்தையும் உற்சாகப்படுத்தி உத்வேகமளித்திடும் வகையில் உங்களில் ஒருவனான தான் அந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை போல இரவோடு இரவாக ARREST பண்ணுமா? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!