திமுக இளைஞரணிக்கு அக்கட்சி தலைமை தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி 1980ஆம் ஆண்டு மதுரையில் முறையாகத் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கட்சியின் அடித்தளமாகவும், கொள்கைப் பரப்புரையின் ராணுவமாகவும் திகழ்கிறது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நீண்ட காலம் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
அவரது வழியில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது கட்சியின் இளைய தலைமுறைக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து அணி புத்துயிர் பெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தல், அடித்தளம் முதல் மாவட்டம் வரையிலான அமைப்புகளை வலுப்படுத்துதல், பயிற்சி முகாம்கள் நடத்துதல், புதிய பேச்சாளர்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

குறிப்பாக 2024ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த இளைஞரணி மாநில மாநாடு பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் 2025இல் திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் நடைபெற்றது. இதனிடையே நாளை திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். நாளை மாலை 4 மணி அளவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் திடலில் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் 2.0 ஆட்சியா? அவரு 23ஆம் புலிகேசி..! காதில் பூ சுற்றும் ஸ்டாலின்... EPS விமர்சனம்..!
இந்த நிலையில், நாளை விருதுநகரில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக இளைஞரணி மாநாட்டை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டதாக தெரிவித்தார். இளைஞர்களிடம் திமுகவை கொண்டு சேர்க்கும் பணியை உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இளைஞர் அணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து உதயநிதி ஸ்டாலின் சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். திமுக இளைஞர் அணிகள் களமாடியவர்கள் தான் தற்போது அமைச்சர்களாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார். இளைஞர்களிடம் திமுகவை கொண்டு சேர்க்க இளைஞர் அணி தொடங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே திருவண்ணாமலையில் ஒன்றரை லட்சம் இளைஞர்களை கூட்டி மிகவும் சிறப்பாக நடந்த மாநாட்டை பார்த்து எதிர் கட்சியினருக்கு தூக்கம் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முறை..! 14 கோடி மதிப்பிலான கடல் ஆமை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!