தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். 31,373 தூய்மை பணியாளர்கள் இந்த இலவச உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.
பணியின் போது உயிரிழப்பவர்களுக்கு நிவாரணத் தொகையை 10 லட்சமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தூய்மை பணியாளர் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை, சுய தொழில் மானிய திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை என்று தெரிவித்தார். சென்னையில் தூய்மையாக வைத்திருக்க காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று தெரிவித்தார். ஊரெல்லாம் உறங்கிய பின்னர் உறங்காமல் பணியை செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள் என்றும் உங்களின் அர்ப்பணிப்பை பார்த்து சமூகமே நன்றி உணர்வோடு இருக்கும் என்று கூறினார். தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை என்றும் அவர்களின் சுயமரியாதையை காப்பதற்காகவே உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். புயல், வெள்ளம் என பல பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுவதாக கூறினார்.
இதையும் படிங்க: SIR பணியில் சுணக்கம்... திமுக அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...!
கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரம் வீடுகள் வரை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தூய்மை பணியாளர்களுக்கு 200 வார்டுகளிலும் ஓய்வு அறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொளத்தூர் வெற்றி தீர்மானிக்கப்பட்டதே...! பெருமையுடன் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்...!