விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகப் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு வாரங்களாக சிறையில் இருந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் வெளியே வந்தார்.ஜூலை 18 ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜயைக் குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சட்டமன்றத்தைப் பூட்டினால் எலும்பை உடைத்து விடுவோம் என்ற தொனியில் அவர் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் பேச்சு பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியது. அடுத்த நாளே தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.ஜூலை 20 ஆம் தேதி அதிகாலையில் விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் மார்க்கண்டேயனைக் கைது செய்தனர். சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கு முன் சபாநாயகர் அனுமதி தேவை என்று அவர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், நீண்ட விசாரணைக்குப் பிறகு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை ஆகஸ்ட் 3 வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.சிறையில் இருக்கும்போது திமுக தலைவர்கள் பலர் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. கீழ்நீதிமன்றங்களில் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணை நடைபெற்றது.
இதையும் படிங்க: "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். இனிமேல் இதுபோன்ற மிரட்டல் தொனியில் பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற அமர்வு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இரண்டு வாரங்களுக்கு தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று பாளையங்கோட்டை சிறையிலிருந்து மார்க்கண்டேயன் வெளியே வந்தார். சிறை வாயிலில் திமுக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!