ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை அதிகாரிகளுடன், பிரதமர் மோடியும் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங்கை அழைத்து பேசினார். ராணுவத்தின் உத்தேச தாக்குதல் திட்டம் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கினார்.

இந்த நிலையில் நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அவசர உத்தரவு பிறப்பித்தது. இந்த போர் ஒத்திகை, உடனடி போர் வருவதற்கான அறிகுறி அல்ல. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் கால ஒத்திகை என்பது போர், ஏவுகணை தாக்குதல் அல்லது வான்வழி தாக்குதல் போன்ற அவசர காலங்களில் மக்கள் மற்றும் அரசாங்க அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சோதிக்கும் ஒரு பயிற்சி மட்டுமே.
இதையும் படிங்க: பாக். கதி அம்பேல்..! இந்தியாவை அசைச்சுக்க முடியாது..! அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வு..!

வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிக்க விடுதல்: எதிரி விமானங்கள் குண்டு வீச வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி கேட்டதும், பொதுமக்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு, உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிய வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சாலைகள், வீதிகளில் இருந்தால் சட்டென கீழே படுக்க வேண்டும். இந்த சைரன்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை மாநில அரசுகள் முதலில் சோதிக்க வேண்டும்.

நாளை நடக்கும் ஒத்திகையின் போது, தற்காலிகமாக மின் தடை ஏற்படலாம். மொபைல் சிக்னல்கள் துண்டிக்கப்படலாம் அல்லது போக்குவரத்து மாற்றப்படலாம். சில பகுதிகளில், போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கி பயிற்சி செய்யலாம். இதனால் மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். தண்ணீர், மருந்துகள் மற்றும் டார்ச் லைட் போன்ற அடிப்படை பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பக்கூடாது. மின்சாரம் அல்லது இணையம் சிறிது நேரம் தடைபட்டால் பதட்டப்பட வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கடைசியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாளை பெறவுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது, பதற்றமான சூழலில் மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாக். கதி அம்பேல்..! இந்தியாவை அசைச்சுக்க முடியாது..! அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வு..!