“காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதச் செயலுக்குக் காரணமான தீவிரவாதிகளை வேட்டையாடுவோம். இந்தியாவின் பதிலடி என்பது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கும்” என்று‘ஆவேசம்’காட்டி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதுஉண்மையில் ஆவேசமல்ல, வேஷம்தான் என்பது அவரது செயல் மூலம் தெரிகிறது'' என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
ஆவேசமா? வேஷமா? என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள கட்டுரையில், ''ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பஹல்காம் மாவட்டம், பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கர தீவிரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 உயிர்கள் கொல்லப்பட்டன. இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த இரக்கமற்ற கொடூரமான பயங்கரவாதச் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. இதற்குக் காரணமான பயங்கரத் தீவிரவாதிகளைக் கைது செய்து தண்டிக்கும் கடமை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு உள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் நடக்கும் போது வெளிநாட்டில் இருந்தார் பிரதமர் மோடி. உடனடியாக நாடு திரும்பினார். ஆனால் சம்பவம் நடந்தபஹல்காம் மாவட்டம் செல்லவில்லை. காயமடைந்த மக்களை மருத்துவ மனைக்குச் சென்று பார்க்கவில்லை. உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலிசெலுத்தவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்தியது.அதிலும் கலந்து கொள்ளவில்லை. உடனடியாக நாடு திரும்பிய அவர், பீகாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பயங்கரவாதச்செயலைக் கண்டித்து பீகார் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார் பிரதமர். எனவேதான் அவரது பேச்சு ஆவேசமல்ல, வேஷம்தான் என்று சொல்ல வேண்டியதாக உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு... மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு!!

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி காஷ்மீரில் சட்ட மன்றத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது” என்றார். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதம் இறுதிமூச்சை விடவில்லை. மக்கள்தான் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கிஷ்த்வார் என்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஷாகுன் பரிஹார் என்பவர்வேட்பாளராக அப்போது நிறுத்தப்பட்டு இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வன்முறையில் தனது தந்தை மற்றும் உறவினர்களை இழந்தவர் அவர். “கிஷ்த்வாரில் ஷாகுன் பரிஹாரை வேட்பாளராக நாங்கள் அறிவித்துள்ளோம். இது ஜம்மு - – காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் துடைத்தெறியும் பா.ஜ.க.வின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பயங்கரவாதத்தில் இருந்து ஜம்மு - காஷ்மீரை முழுமையாக விடுவித்து, அதை சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகவும், சர்வதேச திரைப்பட படப்பிடிப்புத் தளமாகவும் மாற்றுவதே எங்களின் நோக்கம்” என்றும் பேசினார் பிரதமர் மோடி.இப்போது துப்பாக்கிப் பயங்கரம் வெடித்த இடம் சுற்றுலா தலம்.கொல்லப்பட்டவர்கள் சுற்றுலா பயணிகள். அப்படியானால் ஜம்மு – காஷ்மீரைபயங்கரவாதத்தில் இருந்து விடுவித்துவிட்டோம் என்று மார்தட்டியது எப்படி உண்மையாகும்? அது வேஷம் அல்லவா?

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கிறது. இருநாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்றச் சொல்லி இருக்கிறது. அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரி களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள் ளது. பாகிஸ்தான் தூதர் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் பயங்கரவாத சம்பவம் நடந்த பிறகு நடத்தப்பட்டவை.ஆனால் ‘சவுகிதார்’ ஆட்சியில் இந்த சம்பவம் எப்படி நடந்தது?
பா.ஜ.க. ஆட்சியில் இது முதல் சம்பவம் அல்ல. ‘கோழை இந்திய பிரதமராக இருப்பதால்தான் அண்டை நாடுகள் ஆட்டம் போடுகிறது’ என்று பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது நரேந்திர மோடி சொன்னார். அவரது ஆட்சியில் என்ன நடந்தது?
*2016 சனவரி 2 - பதான்கோட் தாக்குதலில் 7 வீரர்கள் பலி.
*2016 பிப்ரவரி - பொம்பொரியில் எட்டு ராணுவ வீரர்கள் பலி.
*2016 செப்டம்பரில் - உரி தாக்குதலில் 19 படைவீரர்கள் பலி.
*2017 போபால் உஜ்ஜைனி தொடர் வண்டியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டுப் பேர் காயம்.

*2017 - அமர்நாத் கோவில் தாக்குதலில் ஏழு பேர் பலி.
*2017 லெத்திபோரா கமாண்டோ பயிற்சி நிலைய தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி.
*2019 பிப்ரவரி 14 - புல்வாமா தாக்குதலில் 40 படைவீரர்கள் பலி.
*2022 ஆகஸ்ட் 11 - இரஜோரி ராணுவ முகாம் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி.
*2024 மே 4 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஞ்ச் பகுதியில் பயங்கரவாதி களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சண்டை ஏற்பட்டது.
அதே ஆண்டு மே 19 ஷோபியான் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் பலி. இவை எல்லாம் நாளிதழ்களில் வந்த செய்திகள்தான். நாளேடுகளில் வராத செய்திகள் எவ்வளவோ? 2019 பிப்ரவரி 14 அன்று சி.ஆர்.பி.எஃப். படையினர் மீது தாக்குதல்நடத்தப்பட்டு 40 பேர் பலியான ‘புல்வாமா தாக்குதல்’ குறித்து, அப்போதைய ஜம்மு - – காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் என்ன சொன்னார்? “ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியம்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம்” என்று சொன்னார்.

இப்போது பைசரன் பள்ளத்தாக்கில் ஒரு காவலர் இல்லை, ஒரு ராணுவ வீரர் இல்லை. இதுதான் காஷ்மீரத்துக்கு கொடுத்த பாதுகாப்பா?370 சிறப்புப் பிரிவை நீக்கினால் காஷ்மீர் அமைதியாகி விடும். காஷ்மீர்மாநிலத்தைப் பிரித்தால் அது அமைதியாகிவிடும். சட்டமன்றத் தேர்தல் நடத்தா விட்டால் அமைதியாகி விடும். உள்ளூர் அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தால் அமைதியாகி விடும் பூமராங் காட்டி வந்தார்களே தவிர, காஷ்மீரத்தை பாதுகாக்கவில்லை. அது அவர்களது நோக்கமாகவும் இல்லை. அதனால்தான் பிரதமர் பேச்சு வேஷமாகவே இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கதை முடிஞ்சது..! புதுசா 2 அணைகளுக்கு பிளான் ரெடி..! பாலைவனம் ஆகும் பாகிஸ்தான்..!