தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மாநிலத்தின் முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்" எனத் தொடங்கும் அந்த அறிக்கையில், அவமானங்களையும் ஏளனங்களையும் கடந்து மக்கள் அளித்த இந்த வெற்றி ஒரு "அதிசயம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி ஆரம்பித்தது முதல் எதிர்கொண்ட சவால்கள் குறித்து விஜய் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். நடுநிலை என்ற பெயரில் முகமூடி அணிந்த அவமானங்களே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால் எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி தில்லாக நின்றோம்.
நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ, அந்தத் தமிழ்நாட்டு மக்கள் நம்மைத் தாயன்போடு தாங்கிப் பிடித்து அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்தத் தேர்தலை ஒரு "அதிசயத் தேர்தல்" என வர்ணித்துள்ள விஜய், அதற்கான முக்கியக் காரணியாகக் குழந்தைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக அச்சுறுத்திக் கொண்டிருந்த பண பலத்தை மக்கள் முறியடித்துள்ளதாக விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார். மாற்றத்திற்கான இந்தப் போரில் வென்றது தவெக மட்டுமன்று; மக்களின் மனங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான்.
தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தவெக மாற்றத்திற்கான முதன்மைச் சக்தி என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகளுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் தனது அன்பை விஜய் பகிர்ந்துள்ளார்:
கழக நிர்வாகிகள் மற்றும் 'Eternal Warriors' என அழைக்கப்படும் தொண்டர்களுக்குத் தனித்தனியாகத் தனது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார். இவ்வேளையில் நமக்கு வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ள இந்த அறிக்கையைத் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!