தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர், கால்நடை மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாநில அரசு தீர்மானிக்கும் அளவுகோல்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு நீண்ட காலமாக இருந்து வருகிறது. கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ் வழிக் கல்வி பயின்றோர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வால் பாதிக்கப்படுவதாக மாநில அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

அதேபோன்ற கவலைகள் கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கையிலும் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது பல இடங்களில் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ இடங்கள் நிரப்பப்படுவதால், மாநில அரசின் கட்டுப்பாடும் மாணவர்களின் வாய்ப்புகளும் பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.முதலமைச்சர் விஜய்யின் இந்தக் கடிதம், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற முந்தைய கோரிக்கையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் மீண்டுமொரு செல்ஃபி வீடியோ... வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு பிரதமர் மோடி வார்னிங்...!
கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புக்கும் அதே கொள்கையை விரிவுபடுத்தி, மாநில அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இதன் மையக் கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கூடுதல் பயிற்சி மையங்களுக்குச் செல்லும் சுமை குறைந்து, பள்ளிக் கல்வியின் அடிப்படையிலேயே சம வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விவகாரம் தமிழக அரசின் கல்விக் கொள்கை மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் அதிருப்தி..! மத்திய அரசு நிலைப்பாட்டை எதிர்த்த முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு கடிதம்..!!