வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதி எனக் குற்றம்சாட்டிய அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஆபத்தான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தப் பின்னணியில், இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களால் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரசும் கைது செய்யப்பட்டு, வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இதையடுத்து, நியூயார்க் நகரில் மதுரோவும் புளோரசும் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு, அமெரிக்க சட்டத்தின்படி நீதி வழங்கப்படும் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி தெரிவித்தார். இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெனிசுலா அதிபர் நான்தான்..!! ஒரே போடாக போட்ட டிரம்ப்..!! அதிரடி பதிவு..!!
அதேசமயம், வெனிசுலாவின் ஏராளமான எண்ணெய் வளங்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதுரோ கைது செய்யப்பட்ட பிறகு, இந்த மாதத் தொடக்கத்தில் நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், வெனிசுலாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல அமெரிக்கர்கள் விடுதலையானதை வரவேற்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் இடைக்கால அரசின் சரியான திசையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரோ நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சில வெனிசுலா மற்றும் வெளிநாட்டுக் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் ரோட்ரிக்ஸ் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் இந்த விடுதலை நிகழ்ந்துள்ளது. வெனிசுலாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான போரோ பீனல் வெளியிட்ட தகவலின்படி, அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்ட 56 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வெனிசுலா அரசு 400 பேரை விடுதலையாக்கியதாகக் கூறியுள்ளது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் அல்லது விடுதலை தேதி, அடையாளங்கள் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், விடுவிக்கப்பட்டவர்கள் அரசியல் காரணங்களுக்காகவா அல்லது வேறு காரணங்களுக்காகவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த ஜூலை மாதம், வெனிசுலா சிறையில் இருந்த 10 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்கள் வெனிசுலாவின் அரசியல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. உலக நாடுகள் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: வெனிசுலா இனி அமெரிக்க தயாரிப்புகளை மட்டுமே வாங்கும்..!! டிரம்ப் திட்டவட்டம்..!!