மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வீட்டு வசதி தேவை, நிலப்பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நவி மும்பையைத் தாண்டி புதிய பிரம்மாண்ட நகரத்தை உருவாக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. ‘கே.எஸ்.சி. நியூ டவுன்’ என அழைக்கப்படும் இந்த புதிய நகரம், எதிர்கால மும்பையின் முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மும்பையில் இடப்பற்றாக்குறை அதிகரித்ததை தொடர்ந்து, பழைய மும்பைக்கு மாற்று நகரமாக நவி மும்பை உருவாக்கப்பட்டது. தற்போது நவி மும்பையிலும் நிலத்திற்கான தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மும்பை பெருநகரப் பகுதியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புதிய இடம் தேவைப்படுகிறது. இதற்காக ராய்காட் மாவட்டத்தில் உள்ள உரான், பன்வெல் மற்றும் பென் தாலுகாக்களைச் சேர்ந்த 124 கிராமங்களை ஒருங்கிணைத்து புதிய நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்னாலா, சாய், சிர்னர் பகுதிகளை குறிக்கும் வகையில் ‘கே.எஸ்.சி. நியூ டவுன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம் சுமார் 323.44 சதுர கி.மீ. பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான மேம்பாட்டு ஆணையமாக மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மும்பை, நவி மும்பை மற்றும் ராய்கட் பகுதிகளுக்கு இடையிலான வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

புதிய நகரத்தின் மிகப்பெரிய பலமாக அதன் போக்குவரத்து இணைப்பு அமைய உள்ளது. அடல் பாலம், நவி மும்பை சர்வதேச விமான நிலையம், பன்வெல்-கர்ஜத் ரயில் பாதை, விரார்-அலிபாக் பல்வழிப் போக்குவரத்து வழித்தடம் மற்றும் மும்பை-புனே விரைவுச்சாலை போன்ற முக்கிய திட்டங்கள் இதற்கு அருகில் உள்ளன.
‘மும்பை 3.0’ என குறிப்பிடப்படும் இந்த வளர்ச்சித் திட்டத்துக்கு 2026-27ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 124 கிராமங்களில் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
புதிய நகரில் குடியிருப்பு மற்றும் தொழில் பகுதிகளுடன் தகவல் தொழில்நுட்ப மையங்கள், தரவு மையங்கள், நிதிச்சேவை நிறுவனங்கள், மருத்துவம், கல்வி மற்றும் சரக்கு போக்குவரத்து மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமைப் பகுதிகள், காடுகள் மற்றும் பல்வகை பயன்பாட்டு குடியிருப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதனால் மும்பையின் எதிர்கால வளர்ச்சி வரைபடத்தில் ‘மும்பை 3.0’ முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!