விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு, பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் மின்வெட்டுப் பிரச்சினையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோடை வெயிலின் உச்சத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை உள்ளிட்ட பல நகர்ப்பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், மதுரவாயல், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மூன்று மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் தமிழகத்தை தவெக அரசு இருளில் மூழ்கடித்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பிற முக்கியப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் கடந்த முறை தமிழகத்தை தவிக்க வைத்த திமுக அரசுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போதைய தவெக அரசும் மக்களை இப்படி வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!
கொளுத்தும் அக்னி வெயிலில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளையும் முதியவர்களையும் படாதபாடு படுத்துவது தான் தவெக தம்பட்டம் அடித்த மாற்று அரசியலா என கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, இப்படி மொத்தமாக மாநிலத்தின் மின்சார உபயோகத்தையே தடுத்து நிறுத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை என்றார்.
மேலும், தவெக அரசின் இந்த தொடர் மின்வெட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்குவதோடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்றும் எனவே, தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்வர் ஜோசப் விஜய் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: பாஜகவில் தூள் பறக்கும் வாரிசு அரசியல்... மகனுக்கு முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கும் நயினார் நாகேந்திரன்...!