கோவை மக்களைக் கீழ்த்தரமாகப் பேசிய தயாநிதிமாறனுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். நேற்று கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பார்கள் எனக் கொங்கு மக்களின் மீது தனக்குள்ள மொத்த வன்மத்தையும் கொட்டியுள்ளார் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் என்று தெரிவித்தார்.
அதைக் கொஞ்சம் கூட கூசாமல் செந்தில் பாலாஜி ரசித்து மகிழ்வதாக சாடினார். அதுசரி ஊரை அடித்து உலையில் போடும் கோபாலபுரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கண்களுக்கு, மற்றவர்களும் ஊரைக் கெடுப்பவர்கள் போலத் தானே தெரியும் என்றும் சாடினார். அதிலும் காலங்காலமாக திமுகவால் முழுமையாகக் கைப்பற்ற முடியாத சிம்மசொப்பனமாகத் திகழும் கோவை மாவட்டத்தின் மீது, உடன்பிறப்புகளுக்கு அளவுகடந்த ஆத்திரம் இருப்பது இயல்பானது தானே என்றும் கூறினார்.

தவறான திட்ட அறிக்கை மூலம் கோவை மாவட்டத்திற்கான மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்ததற்கான காரணம் இப்போது தெரிகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி உரிமைகளை பறித்த ஸ்டாலின் சுயாட்சி பற்றி பேசுறாரு..! பொளந்து கட்டிய தமிழிசை ..!!
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையை, ஊரைக் கெடுப்பவர்களின் ஊர் என்று பொதுவெளியில் அவதூறாகப் பேசுமளவிற்கு ஆணவம் தலைக்கேறிய திமுகவினர், இனி எந்த ஜென்மத்திற்கும் கோவை மண்ணில் கால்பதிக்க முடியாது என்றும் மேலும், தயாநிதி மாறன் தமது பிளவுவாத பேச்சிற்கு உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோவை மக்கள் மீது தயாநிதிமாறன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “இது அதிமுகவோட கோட்டை...” - பாஜக மேடைக்கு கீழ் இருந்து அதிமுக தொண்டர் கொடுத்த ரிப்ளே... ஷாக்கான அமர் பிரசாத் ரெட்டி...!