முதல்வர் நாற்காலி தான் மாறியுள்ளதே தவிர, இந்து விரோத ஆட்சி மாறவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அமைந்துள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரிய விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இது மத நல்லிணக்கம், பாரம்பரியம் மற்றும் சட்ட ஒழுங்கு சார்ந்த பிரச்சினையாக வளர்ந்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற ஆணையிட்ட இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக முதல்வர் ஜோசப் விஜய் அரசு தெரிவித்துள்ளது என்றும் அதன் இந்து விரோத முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

தமிழர் பண்பாட்டு உரிமையான தீபமேற்றுதலை முந்தைய இந்து விரோத திமுக அரசு தடுத்த நிலையில், அதே சதிச் சுவடுகளைத் தானும் பின்பற்றி மக்களின் உரிமைகளைப் பறிப்பது தான் முதல்வர் விஜயின் மாற்று சக்தியா? இதுதான் அனைவருக்குமான அரசா? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம்... சமரசம் கூடாது விஜய்..!! நயினார் வலியுறுத்தல்..!!
அதிகார மமதையில், மக்களின் மதஉரிமைகளை முடக்கிப்போட எத்தனை ஆட்சியாளர்கள் மேல்முறையீடு செய்தாலும், தர்மம் ஒருபோதும் தோற்காது என்ற உறுதியான நம்பிக்கை தமிழக மக்களுக்கு உள்ளது என்று கூறினார். எங்கு சென்றாலும் நீதி வெல்லும் என்று தெரிவித்த நயினார் நாகேந்திரன், தமிழர் பண்பாட்டு உரிமை காக்கப்படும் என்றும் திருப்பரங்குன்ற தீபத்தூண் நிச்சயம் ஒளிரும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!