2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “டிடிவி தினகரன் நட்பின் காரணமாக என்னை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அழைத்துள்ளார். எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் இப்போது ஒன்றிணைந்துள்ளனர்.
நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். டிடிவி தினகரன் இதை எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினால் நாங்கள் இணையலாம். கட்சியில் மீண்டும் ஒன்றிணைய நான் ரெடி. தினகரனும் எடப்பாடியும் ரெடியா? கேட்டுச் சொல்லுங்கள்” என்று உணர்ச்சிமயமாக கூறினார்.
இதையும் படிங்க: நெல்லை தான் என் தொகுதி!! அடித்துப் பேசும் நயினார்! அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு! பொறுத்திருந்து பாருங்கள்!
இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், ஓபிஎஸ் இப்போது அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது மிகப்பெரிய செய்தியாக உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் முதலில் தனது ஆலோசனை கூட்டத்தை முடிக்கட்டும். நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம் வருவார்கள். ஓபிஎஸ் நல்லவர்தான். கூட்டணி குறித்து இதுவரை நான் அவரிடம் பேசவில்லை. தேவைப்பட்டால் கண்டிப்பாக பேசுவேன்” என்று தெரிவித்தார்.
இந்த பேச்சு அதிமுக - பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைவதற்கு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. பாஜக தேசிய தலைமை அதிமுக வாக்குகள் சிதறாமல் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஓபிஎஸ்ஸை கூட்டணிக்குள் கொண்டு வருவது தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என பாஜக கருதுகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு இதுவரை ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் இடமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், பாஜக அழுத்தம் காரணமாக சமரசம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த ஒன்றிணைப்பு நடந்தால் 2026 தேர்தல் களம் முற்றிலும் மாறும்.
ஓபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரிய ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இது குறித்து தெளிவான முடிவு வெளியாகலாம். மக்கள் இப்போது ஓபிஎஸ் - எடப்பாடி சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அறிவாலயம் விரைவில் அழியும்!!! இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது! நாகேந்திரன் வார்னிங்!