தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளை நெருங்கும் திமுக அரசு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற விமர்சனம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிமுக, பாஜக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து எழுந்துள்ளன. குறிப்பாக, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, ஆறுகளை இணைத்தல் மற்றும் சுத்தப்படுத்துதல், அரசுப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேறவில்லை என்பது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வாக்குறுதி மீறல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
இந்த நிலையில், விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதி எண் 72-ல் சொன்னதை செய்தீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

தாங்கள் கொடுத்த இந்த வாக்குறுதியை நீங்கள் தூக்கியெறிந்ததால், கடலோர மாவட்டங்களில் சட்டவிரோத இறால் பண்ணைகள் பல்கிப்பெருகி வருவதோடு, அவற்றில் இருந்து வரும் கழிவுநீர், நிலத்தடி நீரோடு கலந்து, நீராதாரத்தைச் சிதைத்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். இதனால் வயிற்று வலி தொடங்கி தோல் வியாதிகள், கிட்னி பாதிப்புகள் எனப் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, கடலோரப் பகுதி மக்களின் எதிர்காலமே நிர்மூலமாகி வருகிறது என்றும் மேலும், விவசாயமும் சீரழிந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு... குற்றச்சாட்டு இருந்தா சொல்லுங்க..! அமைச்சர் மா. சு. பேச்சு..!
கடலோர மாவட்ட மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றவில்லையென்றால், அவர்களின் வாழ்விடங்களை மாசுபாடின்றி வைத்திருக்கும் இந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மனமில்லாத திமுக அரசின் மறதிக்கும் அக்கறையின்மைக்கும் கடலோர மாவட்ட மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலீஸ் எங்கள சித்திரவதை செய்றாங்க... 5வது நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்...!