கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!
மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜோதிமணி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்கள் மீது மத்திய அரசு பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோதிமணி எம்.பி நீட் முறைகேடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மாணவர்களையும் காவல்துறையினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
மாணவர்களின் இந்த நியாயமான போராட்டம் மற்றும் அவர்கள் மீதான தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு மறுக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இப்பிரச்சனை குறித்துப் பேசக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது.இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சிகளிடம் ஆளுங்கட்சி இவ்வளவு மோசமாக நடந்து கொண்டதே இல்லை.
இதையும் படிங்க: டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!
மற்றும் மத்திய அமைச்சரவை மீது அவர் வைத்த நேரடி விமர்சனங்கள் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போது பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்க்கிறார். மாபெரும் தவறு செய்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் ஏன் இன்னும் பாதுகாத்து வருகிறார்?
பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு, கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் மீதான வன்முறைக்குக் காரணமான பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்த அவர் எங்களின் இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்திலேயே, வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024'-ன் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்போம் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!