×
 

'NEET' ரிசல்ட் வெளியிட தடை.. மாணவி அளித்த புகாரில் ம.பி ஐகோர்ட் உத்தரவு..!

இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, ம.பி., உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஜூன் 14ம் தேதி, தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 4 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடந்தது. 

இதையும் படிங்க: நீட் தேர்வு மோசடி.! வினாத்தாள் கசிவு.. ஆள்மாறாட்டம்.. இப்படிலாம் நடக்குதா பிராடுதனம்!

சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. கடுமையான சோதனைக்கு பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தேர்வு நடந்த அன்று, மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஏராளமான நீட் தேர்வு மையங்களில் 2 மணி நேரம் வரை பவர் கட் ஆனது. சில மையங்களில், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேர்வு நடந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவி, அம்மாநில ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

இந்துார் பகுதியில், எனக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு நாளன்று இடி, மின்னல் காரணமாக எனது மையத்திலும் மின்சாரம் இல்லை. இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்தும், ஜெனரேட்டர் போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை.மின் தடை காரணமாக கவனம் சிதறியதோடு, தேர்வு எழுதும் திறனும் பாதித்தது. 

எனவே எனக்கு மீண்டும் 'நீட்' தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனு, ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர்,

தேர்வின் போது, சரியான சூழலை மாணவ - மாணவிகளுக்கு அதிகாரிகள் வழங்கத் தவறி விட்டனர்.இந்த மனு தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியும் எதிர் மனுதாரர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு, மத்திய பிரதேச மாநில மேற்கு மண்டல மின் வினியோக நிறுவனம் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 30க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த விசாரணை வரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்போது ஜூன் 30 வரை தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டதால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுதும் நீட் தேர்வு எழுதிய 21 லட்சம் மாணவ மாணவிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிர்க்கொல்லி நீட் எப்போது ஒழியும்? என்ன திட்டம் வச்சு இருக்கீங்க? அன்புமணி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share