"முதலீடே வேலைவாய்ப்பின் திறவுகோல்!" – ரூ.17,900 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
''முதலீடு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்பதே எங்கள் அரசின் தாரக மந்திரம்; தனியார் துறையையும் முதலீடு செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.17,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, மாநில வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கைகளுக்கு அடிக்கல் நாட்டினார். விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ரூ.4,727 கோடி செலவில் வெறும் 31 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் 13 ஆயிரம் பெண்கள் பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “முதலீடு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்பதே எங்கள் அரசின் தாரக மந்திரம். அதனால்தான் அரசு தொடர்ந்து உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரித்து வருகிறது. தனியார் துறையும் அதிக முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. முதலீடு அதிகரித்தால் உற்பத்தி உயரும். உற்பத்தி உயர்ந்தால் ஏற்றுமதி அதிகரிக்கும். அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி மக்களின் வருமானமும் வாழ்க்கைத் தரமும் மேம்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!
மேலும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “2014-ம் ஆண்டு வரை நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் விமானப் பயணம் பெருநகர மக்களுக்கு மட்டுமே இருந்தது. இன்று சிறிய நகரங்களைச் சேர்ந்த சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்” என்றும் பிரதமர் கூறினார்.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம் ஆந்திராவின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இது மாநிலத்தின் பொருளாதாரம், தொழில், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். தெலுங்கு மக்களுக்கு இது பெருமை சேர்க்கும் திட்டமாக இருக்கும்” என்றார்.
இந்த புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் வட ஆந்திராவின் தொழில், ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!