மத நம்பிக்கைகள் தவறானவை என தீர்ப்பளிப்பது கடினம்! சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய கருத்து!
சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மத நடைமுறைகளை அகற்ற முடியாது என நீதிபதிகள் அதிரடி கருத்து.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு இந்த முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது.
மத நம்பிக்கைகள் குறித்துக் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மத விவகாரங்களில் கோடிக்கணக்கான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் தவறானவை அல்லது பிழையானவை என்று ஒரு நீதிமன்றம் பிரகடனம் செய்வது மிகவும் சவாலான விஷயம். சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு மதத்தின் அடிப்படை அல்லது சாரமான நடைமுறைகளை அகற்றிவிட முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமர்வில் இடம்பெற்றுள்ள மற்றொரு நீதிபதி நாகரத்னா கூறுகையில் சமூக நலம் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு மதத்தின் உள்ளடக்கத்தை நாம் வெறுமையாக்க முடியாது. மத விவகாரங்களில் அந்த மதத்தோடு சம்பந்தமே இல்லாத நபர்கள் தாக்கல் செய்யும் பொதுநல மனுக்களை (PIL) அனுமதிப்பது கவலைக்குரியது எனச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: சடங்குக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு! சபரிமலை வழக்கில் பரபரப்பு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முன்வைத்த வாதங்கலில் நீதிபதிகள் ஒரு மதத்தில் எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லை என்று முடிவு செய்வது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு என்பது பாலினப் பாகுபாடு அல்ல. இது அங்குள்ள ஐயப்ப சுவாமியின் நித்ய பிரம்மச்சாரி என்ற தனித்துவமான அடையாளத்துடன் தொடர்புடையது என அவர் வாதிட்டார்.
2018 செப்டம்பர் 28 அன்று அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 2019 அன்று நவம்பர் 14 இந்தத் தீர்ப்பிற்கு எதிராக 65-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், வழக்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. மேலும் 2020 ஜனவரி அன்று அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது, ஆனால் கோவிட் காரணமாக விசாரணை தள்ளிப்போனது.
தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை வேகம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசும் இது மத நம்பிக்கையின் ஒரு பகுதி எனத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளையும் (ஏப்ரல் 16) தொடர உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கோட்டையில் அவமானப்பட்ட எடப்பாடி... அதுவும் மோடி முன்னாடி... அதிருப்தியை அப்பட்டமாக காட்டிய ர.ர.க்கள்...!