இந்திய எல்லைக்குள் அத்துமீறும் பாக்., ட்ரோன்கள்! அத்துமீறும் சேட்டை!! வேட்டையாடும் ராணுவ வீரர்கள்!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டது. இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவத்தினர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் நேற்றிரவு (ஜனவரி 15) நடைபெற்றது. இதனை உடனடியாக கண்டறிந்த இந்திய ராணுவ வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.
சம்பா, ராம்கார், பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள தேக்வார் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் நேற்றிரவு பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உடனடியாக எச்சரிக்கை நிலைக்கு சென்று, ட்ரோன்களை இலக்கு வைத்து தாக்கி வீழ்த்தினர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது மூன்றாவது முறையாக பாகிஸ்தான் ட்ரோன்கள் எல்லையை அத்துமீறி நுழைந்துள்ளன. ஜனவரி 11 முதல் 15 வரை மட்டும் 15 ட்ரோன்கள் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர்! டெல்லியில் சல்லடை போட்டு தேடிய போலீஸ்! 25 பேர் கைது!
இந்த தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் கண்காணிப்பு மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“எதிரியின் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எந்தவொரு அச்சுறுத்தலையும் தாங்க மாட்டோம்” என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் எல்லைப் பகுதிகளில் தனது விழிப்புணர்வை மேலும் அதிகரித்து, எந்தவித அத்துமீறலுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளது. இந்த சம்பவங்கள் எல்லைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: எல்லையை பாதுகாக்க தயாராகும் பெண் சக்திகள்!! உருவாகுது புதிய படை! தயாராகும் பிரத்யேக முகாம்கள்!