தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி தனித் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் முன்மொழிந்தார். தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நீட் தேர்வு முறை சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானதாக அமைந்துள்ளது. இது மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படுகிறது. தமிழ் வழியில் பயிலும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை இந்தத் தேர்வு சிதைத்து வருகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகி, பள்ளிப் பாடத்திட்டத்தின் மீதான மாணவர்களின் கவனம் சிதறடிக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டு காலப் பள்ளிக் கல்வியை விடுத்து, ஒரு நாள் நுழைவுத் தேர்வே உயர்கல்வியைத் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது எனத் தீர்மானம் விளக்குகிறது.தமிழ்நாடு சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கல்வியை அளித்து வரும் மாநிலம் என்பதையும் தீர்மானம் வலியுறுத்துகிறது.
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் நீட் தேர்விலிருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், அதற்கு குடியரசுத் தலைவர் ஏற்பிசைவு அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக 2026 ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாயினர். பல இளம் உயிர்கள் பறிபோனதால் மாணவர்கள் இந்தத் தேர்வு முறையின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே தேசிய அளவில் நீட் தேர்வு முறையை முழுமையாகக் கைவிட வேண்டும் என மத்திய அரசை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!
அதற்காக தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதும் தீர்மானத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் நிலையில், இந்தத் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது மாநில உரிமைகளையும் சமூக நீதியையும் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING “தர்மேந்திர பிரதான் பதவி விலகுங்க”... மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த ஜோதிகா...!