காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் மதிப்பு ரூ.24,250 கோடியை எட்டியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வீடுகள் மட்டுமின்றி சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசுவா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் மிக மோசமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்புகள் மற்றும் உயரமான கட்டடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன், பல இடங்களில் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. போக்குவரத்துக்கு முக்கியமான சாலைகள் மற்றும் மேம்பாலங்களும் பாதிக்கப்பட்டதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பேரழிவில் இதுவரை 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: நேபாள வெள்ளம்! 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்! சாதித்த மீட்புக் குழு!

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்மராஜ் உப்ரேதி கூறுகையில், வெள்ளத்தால் வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் ஆரம்ப மதிப்பீடு ரூ.24,250 கோடியாக இருப்பதாக தெரிவித்தார். பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெள்ளத்துக்கு பிந்தைய முதல் நான்கு மாதங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசர மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு மட்டும் சுமார் ரூ.5,000 கோடி தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், தற்காலிக முகாம்களை அமைத்தல், குடிநீர் விநியோகத்தை மீட்டெடுத்தல் மற்றும் மின்சார சேவையை மீண்டும் கொண்டு வருதல் போன்ற பணிகள் இதில் அடங்கும்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 வீடுகளை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதில் குறைந்தது 7,500 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் உப்ரேதி தெரிவித்துள்ளார்.
சேதத்தின் முழுமையான விவரங்கள் அடங்கிய விரிவான மதிப்பீட்டு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், நேபாளத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு மிகப்பெரிய நிதி தேவை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!