2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால், டிஜிபி உத்தரவின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணிக்க முக்கியச் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக 617 துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்கள், 2,528 ஆய்வாளர்கள், 5,540 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 93,500 ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படை காவலர்கள் என மொத்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் கடற்கரை போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் நலன் கருதி அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிறக்கும் புத்தாண்டில் புது நம்பிக்கை ஒளிரட்டும்! “2026.. நம்ம மக்களோட வருஷம்!” முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுத்தல், விபத்துகளைக் குறைத்தல் மற்றும் சாதி, மத மோதல்கள் ஏற்படாமல் அமைதியைப் பராமரிப்பதில் காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியச் சந்திப்புகளில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்துச் செயல்பாடுகள் துல்லியமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்று நடத்தப்படும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்குக் கால அளவு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை ஏற்பாட்டாளர்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ஒட்டுமொத்தப் பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் காவல்துறை தலைமையகம் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் சட்ட ஒழுங்கைப் பேணி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள காவல்துறை, பாதுகாப்பான முறையில் கொண்டாட்டங்களை அமையச் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: “தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்படும்!” - தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புத்தாண்டு வாழ்த்து!