தமிழக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்; பிறக்கின்ற 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நம்பிக்கையை உறுதி செய்யும் ஆண்டாக அமையும்” எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கழக உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியுள்ள உணர்ச்சிகரமான கடிதத்தில், திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டதுடன், ஜனவரி 3-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் ‘திராவிடப் பொங்கல்’ விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு கையில் உரிமைக் போராட்ட வாளையும், மறுகையில் மக்கள் நலன் காக்கும் கேடயத்தையும் ஏந்தி ஜனநாயகப் போர்க்களத்தில் வெற்றி பெறுவோம் என அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டு 2026 பிறப்பதையொட்டி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது ‘உங்களில் ஒருவன்’ மடல் வழியாகத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்த புத்தாண்டு நம் கழக உடன்பிறப்புகளுக்கு வெற்றிக்கான ஆண்டு; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான அஸ்திவாரம்” எனத் தனது உரையைத் தொடங்கிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட ‘விடியல் பயணம்’, ‘காலை உணவுத் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ போன்ற முன்னோடித் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். “எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவும், வாக்களிக்கத் தவறியவர்கள் வருத்தப்படவும் செய்யும் வகையில் எமது ஆட்சி இருக்கும் என்ற எனது வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறேன்” என அவர் பெருமிதம் கொண்டார்.
இதையும் படிங்க: சிப்காட் ஆய்வு முதல் கலைஞர் சிலை திறப்பு வரை - முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பயணம்!
அரசியல் கள நிலவரம் குறித்துப் பேசிய முதலமைச்சர், “எதிர்க்கட்சிகள் சரணாகதி அடைந்து கிடக்கும் வேளையில், திமுக மட்டுமே ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பு மற்றும் நிதிப் பகிர்வு அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது” எனச் சாடினார். மேலும், ‘எதிரிகளும் உதிரிகளும்’ வகுக்கும் வியூகங்களைத் தகர்த்தெறிந்து ஜனநாயகப் போர்க்களத்தில் வெற்றி பெற வேண்டும் என அவர் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் ஜனவரி 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஒன்றியம் மற்றும் நகர அளவில் கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கிய ‘திராவிடப் பொங்கல்’ விழாவை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதற்காக பிரத்யேக இணையதளத்தில் (www.dravidapongal.in) அணிகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் சீரழிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்துள்ள நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான புதிய சாதனைத் திட்டங்களை நிறைவேற்றத் தாம் உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் தமிழ்நாட்டின் உயர்வுக்காக உழைத்த அத்தனை தலைவர்களையும் மதிக்கும் பண்பாடு தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத் தந்தது; அந்தப் பாதையிலேயே நமது அரசு பீடுநடை போடுகிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “தேர்தல் முடியும் வரை நமக்கு ஓய்வில்லை; உழைப்பு.. உழைப்பு.. கழகத்தின் வெற்றிக்கான உழைப்பு மட்டுமே நமது இலக்கு” என்று முதலமைச்சர், அனைவருக்கும் தனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ₹32.62 கோடியில் புத்துயிர் பெற்ற சென்னையின் பாரம்பரியம்! – விக்டோரியா ஹாலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!