சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், செவிலியர்கள் போராட்டம், போராட்டங்களுக்கு போலீஸ் அனுமதி மற்றும் தமிழகத்தின் மின்சாரத் தேவைகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
போராட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது என்று அமைச்சர் கூறினார். அனுமதி வழங்கக்கூடிய இடங்களில் போலீசார் உரிய அனுமதி அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சிக் காலத்தில் சாலையோரங்களில் போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்கள் கூட விரட்டப்பட்டதாக அவர் விமர்சித்தார். ஆனால் தற்போதைய அரசு போராட்டங்களை நடத்த எந்த வகையிலும் தடையாக இருப்பதில்லை என்றும் நிர்மல் குமார் கூறினார்.
செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் பங்கேற்பையும் அமைச்சர் கேள்விக்குள்ளாக்கினார். செவிலியர்களின் போராட்டத்தில் மனோ தங்கராஜுக்கு என்ன தொடர்பு என்றும், அவர் அந்த துறையின் அமைச்சராக இருந்தாரா என்றும் நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி! அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி தாக்கு!!
மேலும், போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று உள்ளே அமர்ந்து போராட்டத்தை திசைதிருப்பி அரசியல் நடவடிக்கையாக மாற்றும் முயற்சிகள் இருப்பதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற செயல்பாடுகள் போராட்டத்தை வேறு திசைக்கு கொண்டு செல்லக்கூடும் என்பதால் போலீசார் தங்களது விளக்கத்தை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். செவிலியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே தமிழகத்தின் மின்சாரத் தேவை குறித்தும் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் முழுமையாக கிடைக்காத சூழலில், உச்சபட்ச மின் பயன்பாட்டு நேரங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் மின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?