தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கூட்டணி குறித்த அனைத்து யூகங்களுக்கும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தார். நம்மளோட தலைமையில்தான் ஆட்சி என்பதில் நாங்கள் எப்பவும் உறுதியாக இருக்கிறோம் என அவர் தொண்டர்களிடையே முழங்கினார்.
தவெக அந்த டீம், இந்த டீம் என்று சில வதந்திகளைச் சொல்லிக் கொண்டே இருந்தனர். விஜய் எந்த டீமும் இல்லை, மக்கள் டீம் என்று தெரிந்த பிறகு, இப்போது அந்த கூட்டணி, இந்த கூட்டணி என்று பேரம் பேசுவதாக அவதூறு பரப்புகின்றனர். இவை அனைத்திற்கும் நான் இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன் எனச் சாடினார்.

ஏற்கனவே தவெக நிர்வாகிகள் குறிப்பிட்டது போல, 90 தொகுதிகள் மற்றும் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவி போன்ற பேரங்களை நிராகரித்ததை உறுதிப்படுத்தும் வகையில், யாருடைய அழுத்தத்திற்கும் நாம் பணியப் போவதில்லை; நம் இலக்கு மக்கள் நலன் மட்டுமே எனத் தெரிவித்தார். யார் எந்த அவதூறுகளைப் பரப்பினாலும், எல்லாம்வல்ல இறைவன் அருளால் நாம் நினைத்த இலக்கை (2026 வெற்றி) அடைய முடியும் என இஸ்லாமியப் பெரியவர்கள் முன்னிலையில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
நாம் 234 தொகுதிகளிலும் தனித்தே களம் காண்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. நம்மளோட தலைமையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக இருங்கள் என நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அதிமுக அல்லது பாஜகவுடன் தவெக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்த இஃப்தார் மேடையை அதற்குப் பதிலளிக்கப் பயன்படுத்திக் கொண்ட விஜய், தான் ஒரு 'தனிப் பெரும் சக்தியாக' மட்டுமே களம் காணப் போவதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!