தமிழ்நாட்டில் விடுமுறை நாட்களிலும், முக்கிய பண்டிகைக் காலங்களிலும் சொந்த ஊர் செல்லும் இலட்சக்கணக்கான மக்களின் தவிர்க்க முடியாதப் பயணத் தேவையைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் நிகழ்த்தி வரும், நேரடியான அல்லது மறைமுகமான, அப்பட்டமானப் பகற்கொள்ளை வேதனை அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
சொந்த பந்தங்களை நாடிச் செல்லும் மக்களின் மகிழ்ச்சிப் பயணத்தை, கண்ணீரும் கவலையும் நிறைந்த, பொருளாதாரச் சுமையாக மாற்றுவது உச்சக்கட்டச் சுரண்டல் என்றும் சாதாரண நாட்களில் 500 முதல் 600 ரூபாய் வரை மட்டுமே உள்ள ஒரு இருக்கையின் பயணச்சீட்டு விலை, பண்டிகைக் காலங்களில் எந்தவித நியாயமானக் காரணங்களும் இன்றி, 1500, 3000, சில சமயம் 4000 ரூபாய் வரை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவது ஒரு சமூக அநீதி என்று கூறினார்.

தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் மாதச் சேமிப்பின் ஒரு பகுதியை, இத்தகைய கட்டணக் கொள்ளையால் இழக்கிறார்கள் என்றும் இது, ஒரு குடும்பத்தின் அத்தியாவசியச் செலவினங்களை விட அதிகமாகி, அவர்களைக் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகிறது எனவும் கூறினார். அரசு நிர்ணயித்த விதிகள் மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நடக்கும் இந்தச் செயல்கள், தமிழக அரசின் சட்டக் கட்டுப்பாட்டையே கேள்விக் குறியாக்குவதாக கூறிய வேல்முருகன் மக்களின் கஷ்டத்தைப் பயன்படுத்தும் இந்த மனிதாபிமானமற்ற லாப வேட்டையை, இனியும் அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்று கூறினார்.
இதையும் படிங்க: விஜய் பாவம்யா... கூட விஸ்வாசிகள் இருந்திருந்தா… தாடி பாலாஜி சர்ச்சை கருத்து…!
மக்களின் கண்ணியமானப் பயண உரிமையைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாகக் காலத்தின் தேவைக்கேற்ப, நல்லதொரு வழிகாட்டுதலுக்குரிய சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆம்னி பேருந்துகளுக்கு, இயக்கச் செலவுகள் மற்றும் நியாயமான இலாபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நிரந்தரமான, பொதுமக்களுக்கு உகந்த, பயணச்சீட்டு விலை நிர்ணயக் கொள்கையை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவுகளும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஒருங்கிணைந்த ஆன்லைன் தளத்தின் கீழ் மட்டுமே நடைபெறும் ஒற்றைச் சாளர முறை உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை மீறி வசூல் செய்யும் நிறுவனங்கள் மீதுப் பெயரளவில் அபராதம் விதிக்கும் போக்கை அரசுக் கைவிட்டு, முதல் விதிமீறலுக்கே கடுமையான அபராதமும், பேருந்தின் வழித்தட அனுமதி மற்றும் உரிமத்தைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யும் நடவடிக்கைகளும் உறுதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
இதையும் படிங்க: வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்... - ஆனந்த் போய் ஆதவ் வந்தது டும்..டும்..டும்... அப்செட்டில் தவெக தொண்டர்கள்...!