சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அதிரடியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
“பா.ஜ.க - அதிமுக கூட்டணியில் எனக்கும் என் ஆதரவாளர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யுங்கள். இல்லையெனில் எங்களை விட்டுவிடுங்கள். விரைவில் முடிவு சொல்லாவிட்டால், தனிக்கட்சி தொடங்கி தவெக அல்லது திமுக உடன் கூட்டணி அமைத்துக்கொள்வோம்” என ஓ.பி.எஸ் தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாலேயே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்று துணை முதல்வராக பொறுப்பேற்றதாக ஓ.பி.எஸ் பலமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு கட்சியிலிருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிங்க: எத்தனை தொகுதிகள் எங்களுக்கு? முதல்வர் ஸ்டாலினோடு காங்கிரஸ் ஐவர் குழு டிஸ்கஷன்!
கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக - பா.ஜ.க இடையே மீண்டும் கூட்டணி அமைந்தது. இந்தக் கூட்டணியில் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என பா.ஜ.க மேலிடம் வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இதனால் மனமுடைந்த ஓ.பி.எஸ், தான் நடத்திவந்த ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வை ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்’ என பெயர் மாற்றினார். அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து “தனிக்கட்சி தொடங்கி தவெக அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டில்லியில் முகாமிட்டிருந்த ஓ.பி.எஸ், அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது “கூட்டணியில் எங்களுக்கு இடம் தந்து உறுதிப்படுத்துங்கள். இல்லையெனில் எங்களை விடுவியுங்கள்” என நேரடியாகவே கேட்டுக்கொண்டதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை திரும்பிய பின்னர் ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டில்லியில் அமித் ஷாவை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தேன். நல்ல முடிவு விரைவில் வரும்” என மர்மமாக புன்னகைத்தார்.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தக்கூடிய இந்த பேச்சுவார்த்தையால், அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்படுமா? ஓ.பி.எஸ் தவெக அல்லது திமுக பக்கம் தாவுவாரா? என தமிழகமே உற்றுநோக்கி உள்ளது.
இதையும் படிங்க: தவெகவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பிரேமலதா! கூட்டணி அமைச்சரவைக்கு அச்சாரம்! சூடுபிடிக்கும் தேர்தல்களம்!