தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்து விட்டு, தூத்துக்குடிக்கு வரும் 26ம் தேதி வர உள்ளார். தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதையடுத்து, அவர் இரவு திருச்சிக்கு வருகிறார். 27ம் தேதி காலை பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு, ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின், தூத்துக்குடி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதமரின் வருகையை ஒட்டி தூத்துக்குடியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் நவீன தொலைத்தொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையும் படிங்க: பிரிட்டன் இளவரசருக்கு மோடி கொடுத்த கிப்ட்.. லண்டன் பயணத்தின் ஹைலைட்!
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகர எல்லைக்குள் வரும் 27ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி தரப்பில் இருந்து நேரம் கேட்க உள்ளதாகவும், முக்கிய நிர்வாகிகளுடன் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. சென்னையில் நடந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுக-பாஜ இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வரவுள்ள நிலையில், அவரை வரவேற்கவும், வழியனுப்பவும் வாய்ப்பு கிடைத்தால் பாக்கியமாக கருதுவேன் என ஓ.பி.எஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரை சந்திக்க விரும்புவதாக அவர் எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் தமிழக பயணத்தின் போது இந்த சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில், தற்போது ஓபிஎஸ்ஸும் கேட்டிருக்கிறார். இதனால் தமிழக அரசியல் களமே சூடுபிடித்துள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த வேளையில் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தால் அது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறும். மேலும் இந்த கடிதம், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியின் எதிர்கால உறவுகளை பாதிக்கக்கூடிய முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் வருகை எதிரொலி.. திருச்சியில் இன்று முதல் 27ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..!