ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வழக்கில், பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத்துக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சம்மன் அனுப்பியுள்ளது. ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் 22ல் ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா பகுதியான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பாகக் குறிப்பிடப்படும் ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்’ பொறுப்பேற்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் 15ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீத் முக்கிய பங்கு வகித்ததாக என்ஐஏ குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டதாகக் கூறப்பட்ட பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமும் மேலும் அதிகரித்தது.
தற்போது பாகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படும் ஹஃபீஸ் சயீத் இந்திய நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் இந்தியாவிடம் இல்லாத நிலையில், சம்மனை அமல்படுத்துவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தில் முக்கியத்துவம் பெறும்.
பஹல்காம் தாக்குதல் வழக்கில் சயீத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல் 166 உயிர்களை பலிகொண்ட 26/11 வழக்கு! 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வேகம் பிடித்த விசாரணை!