பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளையும் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு இதனை முற்றிலும் மறுத்து, தங்கள் நிலப்பரப்பில் அத்தகைய அமைப்புகள் செயல்படவில்லை எனக் கூறி வருகிறது. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
பாகிஸ்தான் தரப்பு 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் அவையின் ஆப்கானிஸ்தான் பணியகம் இதனை உறுதி செய்தது.
இதையும் படிங்க: பாக். அழகு கிரீம்களில் அதிக பாதரசம்.. சிறுநீரக பாதிப்புக்குள்ளான 18 பெண்கள்..!! இந்திய மருத்துவர்கள் வார்னிங்!!
இந்நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் 10 இடங்களில் துல்லியமான வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்தபடி, முந்தைய நாள் பயங்கரவாதிகள் எல்லையைத் தாண்டி ஊடுருவ முயன்றதை பாகிஸ்தான் ராணுவம் முறியடித்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலிபான் படைகள் எட்டு டிரோன்களை ஏவியதாகவும், அவை கோஹாட் மற்றும் தோர்காம் பகுதிகளை நோக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் விமானப் பாதுகாப்பு அமைப்புகள் அந்த எட்டு டிரோன்களையும் இலக்கை அடையும் முன்பே சுட்டு வீழ்த்தி அழித்துவிட்டன. இதையடுத்து, டிரோன்களை ஏவவும் சேமிக்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 10 இடங்களில் பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் கோஸ்ட் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றதாக ஆப்கானிஸ்தான் உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் மத்திய அரசு இதுவரை உத்தியோகபூர்வ கருத்து எதையும் வெளியிடவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு பிப்ரவரி 2026இல் தொடங்கிய ‘திறந்த போர்’ நிலையிலிருந்து தொடர்கிறது. சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முயன்றாலும், எல்லையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. பிராந்திய பாதுகாப்புக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!