பரமத்தி வேலூர் அருகே உள்ள பிளிக்கல்பாளையம் பகுதியில், மதுரையைச் சேர்ந்த வெல்ல வியாபாரி வைரவன் தனது மனைவி சுமதியுடன் வசித்து வருகிறார்.
பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. குண்டு வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இவற்றை வாங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வைரவன் அனுப்பி வருகிறார். இதற்காக மதுரையைச் சேர்ந்த அவர், பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள பிளிக்கல்பாளையத்தில் வீடு எடுத்து அங்கேயே தங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: #Breaking அதிகாலையிலேயே அதிர்ச்சி... ஸ்ரீபெரும்புதூரையே அதிர விட்ட துணிகரம்... களமிறங்கிய காவல்துறை...!
நாளை வெல்லச் சந்தை நடைபெறவிருந்ததால், அவர் அதிக அளவில் பணம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் 40 சவரன் நகைகளும் இருந்துள்ளன. நேற்று நள்ளிரவு வழக்கம்போல் வைரவன் தனது வீட்டை உள்பக்கமாகத் தாழிட்டு, மனைவியுடன் தூங்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதைப் பார்த்து வைரவன் மற்றும் அவரது மனைவி சுமதி கூச்சலிட்டுள்ளனர். அப்போது கொள்ளையர்கள் இருவரையும் தாக்கி மிரட்டி, அவர்களது கைகளைக் கட்டிப்போட்டு உட்கார வைத்துள்ளனர்.
பின்னர், வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு, தம்பதியினர் சத்தம் போட்டதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். பின்னர் அவர்களைக் கட்டுகளில் இருந்து அவிழ்த்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஜேடர்பாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு பெரிய கொள்ளைச் சம்பவமாக இருப்பதால், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி! போலீஸ் விசாரணையில் பகீர்!