பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக எழுந்துள்ள புதிய குழப்பங்களுக்கு தீர்வு காணும் முயற்சியாக, தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. திட்டத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க, தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் விரைவில் டெல்லி சென்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், சமீபத்தில் தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பரந்தூரில் விமான ஓடுபாதை அமைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்த தகவல் விமானப் போக்குவரத்து துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய திட்டம்! முதல்வர் விஜய் கறார்! பெரிய பிரச்னையாகிவிடும் என அச்சுறுத்தும் அதிகாரிகள்!
இந்த சூழலில், திட்டத்தின் தற்போதைய நிலை, ஓடுபாதை அமைப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றை சரிசெய்யக்கூடிய தொழில்நுட்ப தீர்வுகள் குறித்து மத்திய அரசின் கருத்தை அறிய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நேரடி ஆலோசனை நடத்த தமிழக அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர்.

இந்த சந்திப்பில், பரந்தூர் திட்டத்தை தற்போதைய இடத்திலேயே முன்னெடுக்க முடியுமா, ஓடுபாதை அமைப்பில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மாற்று தீர்வுகள் உள்ளனவா, அவசியம் ஏற்பட்டால் வேறு இடத்தை பரிசீலிக்க வேண்டுமா என்பது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக்கு பிறகு மத்திய அரசு வழங்கும் தொழில்நுட்ப கருத்துகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகளை தமிழக அரசு எடுக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் எதிர்காலம் குறித்து நடைபெறவுள்ள இந்த டெல்லி ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போதையில் தகராறு செய்த கணவன்!! கத்தியால் குத்தி கதையை முடித்த மனைவி!!