சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜயின் இல்லம் அருகே நேற்று நள்ளிரவில் பொதுமக்கள் திடீரென திரண்டு சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் வசிக்கும் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈசிஆர் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்வெட்டு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவும் பல மணி நேரமாக மின்சாரம் வராததாலும், மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டபோதும் உரிய பதில் கிடைக்காததாலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகளுடன் நள்ளிரவில் வீதிக்கு திரண்டனர்.
முதலமைச்சர் வசிக்கும் தெருவின் முக்கிய சந்திப்பில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், “முதலமைச்சர் வசிக்கும் பகுதிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பிய அவர்கள், ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையும் படிங்க: விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நீலாங்கரை போலீசாரும் மின்வாரிய அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “புதிய டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறும் அதிக மின்சார சுமையும் காரணமாக மின்தடை ஏற்பட்டது; உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இரவு சுமார் 2 மணி அளவில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: "REELS போட்டு விளையாடுங்க பாஸ்"..! பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வருவோம்..! ஆத்திரத்தில் வெளுத்து வாங்கிய அதிமுக..!