பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு 8 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலகளாவிய தெற்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதும், பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார் பிரதமர் மோடி.

முதலில், அவர் கானா சென்றடைந்தார். கானா நாட்டு ஜனாதிபதி ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில் மோடி முதல் முறையாக கானாவுக்கு பயணம் மேற்கொண்டார். கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் கானாவுக்கு பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய கவுரவம்.. 5 நாடுகளுக்கு பயணம்.. அசத்தல் ப்ளான்..!

தொடர்ந்து கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள ஜூபிலி ஹவுஸில் நடைபெற்ற அரசு விருந்தின்போது ‘The Officer of the Order of the Star of Ghana’ என்ற உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா-கானா இடையேயான உறவுகளை வலுப்படுத்தியதற்கும், கானாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றது தனக்கு பெருமை அளிப்பதாகவும், இது 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா-கானா இடையேயான நட்புறவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதனிடையே தனது எக்ஸ் தளத்தில், 'தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா' விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த கௌரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம், நமது வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவம் ஒரு பொறுப்பாகும்; வலுவான இந்தியா-கானா நட்புறவை நோக்கி தொடர்ந்து பாடுபடுவது. இந்தியா எப்போதும் கானா மக்களுடன் நிற்கும், மேலும் நம்பகமான நண்பராகவும் மேம்பாட்டு கூட்டாளியாகவும் தொடர்ந்து பங்களிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாக்.,? உளறிக்கொட்டிய கடற்படை கேப்டனால் சிக்கலில் பாஜக..!