குஜராத் மாநிலத்திற்கு நாளை அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வடோதரா நகரில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் கலந்துகொண்டு, ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட ரூ.35,000 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சரக்குப் போக்குவரத்து இணைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், ஒன்றிய அரசால் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத் திட்டத்தின் (Dedicated Freight Corridor) மிக முக்கியக் கட்டப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, மேற்கு சரக்கு வழித்தடத்தில் (WDFC) சுமார் ரூ.20,700 கோடி செலவில் 326 கிலோமீட்டர் தொலைவிற்குப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சனந்த் (வடக்கு) – மகர்புரா, நியூ உம்பர்காவ் – நியூ சபாலே, மற்றும் நியூ சபாலே – ஜேஎன்பிடி (JNPT) ஆகிய 3 முக்கிய ரயில்வே சரக்குப் போக்குவரத்துப் பாதைகளை நாளை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

இப்புதிய சரக்குப் பாதைகள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்குத் தங்குதடையற்ற நேரடி சரக்கு ரயில் இணைப்பு வசதி கிடைப்பதுடன், சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான பயண நேரம் மற்றும் சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் வெகுவாகக் குறையும். இதனுடன், பல்வேறு முனையங்களிலிருந்து புதிய சரக்கு ரயில் சேவைகள் மற்றும் சோபட் - தண்டா ரோடு இடையிலான புதிய பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதையும் படிங்க: 12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!
மேலும், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இடையிலான ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.9,700 கோடி மதிப்பிலான வடோதரா - ரத்லாம் 3 மற்றும் 4-வது வழித்தடங்கள் உள்ளிட்ட மூன்று பிரம்மாண்ட ரயில்வே திட்டங்களுக்கும், ரூ.1,780 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் காம்ரேஜ் - சல்தான் இடையிலான 6 வழிப்பாதை விரிவாக்கம் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதுதவிர, குஜராத் மாநில அரசின் ரூ.2,600 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம், கடானா அணை மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டு வசதித் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். நாளை ஒரே நாளில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பயன்பாட்டிற்கு வருவது தேசிய உள்கட்டமைப்புத் துறையில் மாபெரும் பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.50 லட்சம் விவகாரம்.. எங்கும் தப்ப மாட்டேன்: முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் ஐகோர்ட்டில் மனு!