மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில் 69 உறுப்பினர்கள் உள்ளனர். அரசியலமைப்புச் சட்டப்படி அதிகபட்சம் 81 பேர் வரை இருக்க முடியும் என்பதால், 12 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பி அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்த மே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோதே மாற்றங்கள் குறித்த ஊகங்கள் தொடங்கின. ஆனால் உடனடி நடவடிக்கை இல்லை. சமீபத்தில் பாஜக தேசிய நிர்வாகக் குழுவை புதுப்பித்த பிறகு இந்தப் பேச்சுக்கள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.
2029 மக்களவைத் தேர்தல் மற்றும் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களை மனதில் கொண்டு இந்த விரிவாக்கம் திட்டமிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயது அடிப்படையில் இளம் தலைவர்களைச் சேர்ப்பது முக்கிய அம்சமாக இருக்கும். 2024-ல் மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்றபோது பெரும்பான்மை அமைச்சர்கள் 51-70 வயதினராக இருந்தனர். தற்போது 12 அமைச்சர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இதையும் படிங்க: டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!
பீகார் ஹிந்துஸ்தானி அவாம் மோர்சாவின் ஜிதன் ராம் மாஞ்சி (81) மூத்தவராகவும், தெலுங்கு தேசம் கட்சியின் ராம்மோகன் நாயுடு இளையவராகவும் உள்ளனர். இளம் அமைச்சர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.காங்கிரஸ் ஆட்சியிலுள்ள இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களிலிருந்தும் எம்.பி.க்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்திலும், ஆண்டு இறுதியில் குஜராத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் அதிகரித்துள்ள நிலையில் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேக்கு வாய்ப்பு உள்ளது. பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தளத்துடன் மீண்டும் கூட்டணி உருவானால் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மீண்டும் அமைச்சராகலாம்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த மேல்சபை உறுப்பினர்கள், மேற்கு வங்காள திரிணாமுல் அதிருப்தியாளர்கள், மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டோருக்கும் இடம் கிடைக்கலாம் என பேச்சுக்கள் உள்ளன. 14 அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைக் கவனித்து வருகின்றனர். அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரின் பணிச்சுமையைப் பிரித்து புதியவர்களுக்கு ஒப்படைக்கலாம். நீட் கசிவு தொடர்பாக தர்மேந்திர பிரதான் விலகியது, மேல்சபை பதவிக்காலம் முடிந்ததால் சிலர் வெளியேறியது போன்ற காரணங்களால் இடங்கள் காலியாகி உள்ளன.
கட்சிப் பொறுப்பு பெற்றவர்கள், செயல்பாடு குறைவானவர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. ‘ஒருவருக்கு ஒரு பதவி’ கொள்கையின்படி சிலருக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிதின் கட்கரி இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்திருப்பதால் அவரது எதிர்காலமும் பேசப்படுகிறது.
புதிய முகங்கள், பெண்கள் பிரதிநிதித்துவம், கூட்டணி சமநிலை, தேர்தல் உத்தி, பணிச்சுமை குறைப்பு ஆகியவை இந்த அமைச்சரவை மாற்றத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி கோரிக்கை!