டெல்லி: இந்தியாவின் தேசியப் பாடலான “வந்தே மாதரம்”யின் 150ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டமாக, லோக்சபாவில் இன்று (டிசம்பர் 8) 10 மணி நேர சிறப்பு விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உரையாற்றினார்.
“வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்ட முழக்கம் அல்ல… அது சுதந்திரத் தாயின் பாடல். பிரிட்டிஷ் அடிமை சங்கிலியை அறுத்த மந்திரம்” என்று பிரதமர் உணர்ச்சியுடன் பேசினார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, பாடலின் வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு, இன்றைய இளைஞர்களுக்கு அதன் பொருள் என்பவற்றை விரிவாக விளக்கினார்.
பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி, “வந்தே மாதரம் 150ஆம் ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். இங்கு அமர்ந்திருக்கிறோம் என்பது வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தால் தான். அது வெறும் முழக்கம் அல்ல, சுதந்திரத் தாயின் பக்தி” என்று கூறினார்.
இதையும் படிங்க: லோக்சபாவில் இன்று 10 மணி நேர விவாதம்! மோடி மாஸ்டர் ஸ்ட்ரோக்! அனல் பறக்கப் போவது கன்பார்ம்!
1875-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய இந்தப் பாடல், பிரிட்டிஷ் பிரிவினைக்கு (1905) எதிராக ஒற்றுமையை ஊக்குவித்தது என்று வலியுறுத்தினார். “பிரிட்டிஷ் வந்தே மாதரத்தை தடை செய்ய சட்டம் கொண்டு வந்தனர். ஆனால் அது காற்றில் பறந்தது. தூக்குமேடையில் இருந்து கூட தலைவர்கள் வந்தே மாதரம் பாடினர்” என்று சொல்லி, போராட்டத்தின் தீவிரத்தை நினைவூட்டினார்.
“வந்தே மாதரம் தீப்பெட்டி, கப்பல், சுதேசி இயக்கம் என அனைத்திலும் இடம் பெற்றது. வ.உ.சி. இயக்கிய சுதேசி கப்பலிலும் வந்தே மாதரம் பாடப்பட்டது. மகாகவி பாரதியார் இதை தமிழில் மொழிபெயர்த்து, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று பாடினார். அவரது பல பாடல்களிலும் வந்தே மாதரம் இடம் பெற்றது” என்று பாரதியாரை மேற்கோள் காட்டி பிரதமர் பேசினார். காந்தி, “வந்தே மாதரம் தேசிய கீதமாகவே மாறிவிட்டது” என்று கூறியதையும் நினைவூட்டினார்.

“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும். அடிமை சங்கிலி காலம் கருப்பு அத்தியாயம். வந்தே மாதரம் அது அறுத்தது. இன்று அது தேசபக்தியின் மந்திரம்” என்று பிரதமர் உரையை முடித்தார். விவாதத்தில் பாஜக எம்பி.க்களுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது பேச்சாளராக இருப்பார்.
காங்கிரஸ் தரப்பில் கவுரவ் கோகாய், பிரியங்கா காந்தி வத்ரா, தீபேந்தர் ஹூடா, பிமோல் அகோய்ஜம், பிரணிதி சிந்தே உள்ளிட்ட 8 எம்பி.க்கள் பேச உள்ளனர். இது பிரியங்கா காந்தியின் லோக்சபாவில் முதல் உரை. ராஜ்ய சபாவில் நாளை (டிசம்பர் 9) விவாதம் நடைபெறும். உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்குவார், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா இரண்டாவது பேசுவார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 14 மசோதாக்களுக்கான விவாதங்களுடன் இணைந்து இந்த சிறப்பு விவாதம் நடைபெறுவதால், அனல் பறக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் இந்த விவாதத்தை மக்கள் ஆர்வமுடன் பார்க்கும் என்பது உறுதி.
இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு! நாளை பார்லி.,யில் சிறப்பு விவாதம்! பிரதமர் மோடி உரை!