தமிழகத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, தமிழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ₹4,400 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார்.
₹1,853 கோடி மதிப்பீட்டில் பரமக்குடி - ராமநாதபுரம் இடையிலான 4 வழிச்சாலை (NH-87) அமைக்கும் பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம் - புதுச்சேரி இடையிலான 4 வழிச்சாலை (NH-332A) அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இது ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் உதவியாக அமையும்.

அம்ரித் பாரத் ரயில் சேவைகள்: ராமேஸ்வரம் - மங்களூரு மற்றும் தாம்பரம் - மங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே புதிய 'அம்ரித் பாரத்' ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை புறநகர் ரயில் சேவையின் நெரிசலைக் குறைக்க, ₹274 கோடி செலவில் அமைக்கப்பட்ட 4-வது ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!
8 ரயில் நிலையங்கள்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்ட மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி, காரைக்குடி மற்றும் திருவாரூர் ஆகிய 8 ரயில் நிலையங்களை அவர் திறந்து வைத்தார். கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் புதிய ஆகாஷ்வாணி எஃப்.எம் ரிலே டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவை முடித்துக்கொண்ட பிரதமர், மாலை 4 மணியளவில் மதுரையின் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: தேர்தல் களம் சூடுபிடிக்குது... பாண்டிய நாட்டில் கால்பதிக்கும் பிரதமர் மோடி!