பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, தற்போது நமீபியாவை நோக்கி பயணித்துள்ளார். இந்தப் பயணம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய தெற்கு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மோடியின் மிக நீண்ட வெளிநாட்டுப் பயணமாக இது கருதப்படுகிறது.
முதல் கட்டமாக, கானாவில் ஜூலை 2-3 தேதிகளில் பயணம் மேற்கொண்ட மோடி, அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மஹாமாவைச் சந்தித்து, பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, மருந்து உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசினார். கானாவின் உயரிய விருதான ‘தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர், டிரினிடாட் அண்டு டொபாகோவில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, இந்திய வம்சாவளி மக்களுடனான உறவுகளைப் புதுப்பித்தார். அர்ஜென்டினாவில், 57 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சென்ற முதல் பயணமாக, அதிபர் ஜாவியர் மிலேயுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
இதையும் படிங்க: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்.. என்ன விருது தெரியுமா..?
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், பூமியை பாதிக்க கூடிய விசயங்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியின் முக்கியத்துவம் பற்றி சர்வதேச அரங்கில் விரிவாக பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு அமைந்திருந்தது. சுகாதாரம், தொழில் நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றுடன் தொடர்புடைய வெவ்வேறு நோக்கங்கள் பற்றியும் பேசினேன் என தெரிவித்து உள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தக இலக்குகளை நாங்கள் நிர்ணயித்து உள்ளோம். இது இந்தியா மற்றும் பிரேசில் இடையே பொருளாதார இணைப்புகளை ஊக்கப்படுத்தும். குறிப்பிடும்படியாக, விளையாட்டு மற்றும் சுற்றுலா வழியே மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதும் விவாதங்களில் சம முக்கியத்துவம் பெற்றிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பிரேசிலில், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று, உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேசினார்.

இறுதியாக, நமீபியாவில் அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவார், மேலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம், இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை வெளிப்படுத்துவதோடு, வளரும் நாடுகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சீன அதிபர் ஜி ஜின்பிங் காணவில்லை!! இந்தியாவுக்கு ஆபத்து! உடல்நிலை சரிந்ததா? சகாப்தம் முடிந்ததா?