புதுடில்லி, மார்ச் 9: மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியதில், நாட்டின் கல்வி முறையை தொடர்ந்து நவீனமயமாக்கி, உலக அளவிலான தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"சப்கா சாத், சப்கா விகாஸ் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கில் கல்வி, திறன் மேம்பாடு, உடற்கல்வி, சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் மூலம் மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதே அரசின் உறுதி என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில், நாடு முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: ஹலோ நெதன்யாகு!! போர் நிறுத்தம் உடனே வேணும்!! இஸ்ரேல் பிரதமரிடம் மோடி போனில் வலியுறுத்தல்!
ஒலிம்பிக் போட்டிகளுக்கும் நாடு தீவிரமாக தயாராகி வருகிறது. இத்தகைய சூழலில், இளம் விளையாட்டு வீரர்களை ஆரம்பத்திலிருந்தே அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இந்தியா சர்வதேச அரங்கில் உயர்ந்து பறக்க முடியும் என்றார்.
கல்வி துறையில், உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் வகையில் மாற்றங்கள் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்பு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்கால தொழில்நுட்பங்களான ஏஐ (செயற்கை நுண்ணறிவு), ஆட்டோமேஷன், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நாம் தயாராக வேண்டும். இதில் பெண்கள் உட்பட யாரும் வாய்ப்புகள் இல்லை என்று பின்வாங்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இத்துறைகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.
2026 பட்ஜெட்டின் அடிப்படை நோக்கமே மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான் என்று கூறிய பிரதமர், கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்பது கிராமங்கள், நகரங்கள் என்ற எல்லைக்கு அப்பால், ஒவ்வொரு இளைஞரும் புதிதாக ஏதாவது சாதிக்க விரும்புவது தான். இளைஞர்களின் இந்த விடாமுயற்சி மற்றும் புதுமையான சிந்தனை நமக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதைப் பயன்படுத்திக் கொள்ள, கல்வி முறையை தொடர்ந்து நவீனமயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய தேசிய கல்விக் கொள்கை (நியூ எஜுகேஷன் பாலிசி) இதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
இப்போது அதை நடைமுறைப்படுத்துவது மிக முக்கியம் என்று அவர் கூறினார். இந்த உரை நாடு முழுவதும் இளைஞர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) இலக்கை நோக்கி அரசு தீவிரமாக செயல்படும் என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இந்தியாவுக்கு பாதிப்பு?! டெல்லியில் மோடி தலைமையில் அவசர ஆலோசனை!