மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான போர் நிலைமை உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின் முதல் கட்டத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமையை பெரிதும் பாதித்துள்ளது.
இதனால் ஈரான் கடும் கோபத்தில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் வழங்கல் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இதனால் எண்ணெய் ஏற்றுமதி கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ள நாடுகள் கடுமையான பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ளும் சூழல் நிலவுகிறது. இந்தப் பதற்றமான சூழலுக்கிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியானுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இதையும் படிங்க: மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் பண்டிகைகளுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும் என இந்தப் பண்டிகைக் காலம் உதவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கும் வகையிலும் மேற்காசியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கப்பல் வழித்தடங்கள் திறந்து, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஈரானில் வசிக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு ஈரான் அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல், தற்போதைய போர் நிலைமையில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறது. பிராந்தியத்தில் அமைதியை விரும்புவதோடு, உலகப் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான எண்ணெய் வழித்தடங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பேணுவதற்கான முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.
இதையும் படிங்க: தேர்தல் வந்துட்டா போதும்.. அப்படியே பாசம் வந்துடும்..!! பிரதமர் மோடியை சீண்டிய அமைச்சர் ரகுபதி..!!