டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு எல். முருகன் தனது இல்லத்தில் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அவரது வீடு முழுவதும் கரும்பு, மஞ்சள் கொத்துகள், வாழை இலைகள், தோரணங்கள், ரங்கோலி போன்றவற்றால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.30 மணியளவில் விழா தொடங்கியது. பாரம்பரிய முறையில் பொங்கல் பானை வைக்கப்பட்டு, பால் பொங்கியது. பிரதமர் மோடி முன்னிலையில் இந்த பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது அனைவருக்கும் சிறப்பு மகிழ்ச்சியை அளித்தது.பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழக மக்களுக்கும் தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார். அவர் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் "வணக்கம்" என்று தொடங்கி பகிர்ந்து கொண்டார். பொங்கல் விழா விவசாயத்தையும், இயற்கையோடான தொடர்பையும், குடும்ப பிணைப்பையும் கொண்டாடும் ஒரு பண்டிகை என்று அவர் குறிப்பிட்டார். இது தமிழ் மரபுகளின் செழுமையை உலகிற்கு காட்டும் ஒரு பிரகாசமான சின்னம் என்றும் பாராட்டினார்.

வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக்கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளுடனான உறவை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் விழா திகழ்வதாக தெரிவித்துள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கொண்டாடப்பட்டது என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து...!
விவசாயத்தை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை விளங்குகிறது எனவும் பிரதமர் மோடி கூறினார். விவசாயிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி திருக்குறள் பேசுவதாக குறிப்பிட்டார். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார். வாழ்க தமிழ்., வாழ்க பாரதம் என்று தமிழில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... வரும் 23ல் பிரதமர் மோடி மதுரை வருகை...!