தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10-ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் விரைவில் தமிழகம் வரவுள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

ஆளும் திமுக, ஆட்சியைத் தக்கவைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இதனிடையே, நாம் தமிழர் கட்சியும் தவெகவும் தனித்து போட்டியிடும் முடிவுடன் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!
சமீப காலமாக தேசிய அளவிலான தலைவர்களின் வருகைகள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று சென்னைக்கு வந்தார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் வருகைக்குப் பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 1-ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்துவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். தொடர்ந்து மார்ச் 7-ஆம் தேதி வேலூரில் மற்றொரு NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மார்ச் 11-ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் இறுதிக்குள் கூடுதல் வருகைகளும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜகவினர் இந்த வருகைகளுக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலை முன்னிட்டு தேசிய தலைவர்களின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் வியூகங்களை மேலும் கூர்மைப்படுத்தி வருகின்றன. தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தேர்தல் களம் சுவாரஸ்யமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பிரேசில் அதிபர் பிப். 18-ல் இந்தியா வருகை! 2வது ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பு!