பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இஸ்ரேல் பயணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை இந்தியா திரும்பினார். இந்தப் பயணம் இந்தியாவின் வெளியுறவு கொள்கை மற்றும் வர்த்தக நலன்களுக்கு ராஜதந்திர ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மேற்கு ஆசியாவின் முக்கிய நாடான இஸ்ரேலுடன் இந்தியாவின் உறவு இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் மாறியுள்ளது.
பயணத்தின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உற்சாக வரவேற்பு அளித்தார். இரு தலைவர்களும் யாத் வாஷெம் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் சிறப்பு உரை நிகழ்த்திய பிரதமர் மோடிக்கு சபாநாயகர் உயரிய விருது வழங்கி கௌரவித்தார். இது ஒரு இந்திய பிரதமரின் முதல் க்னெசெட் உரை என்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
மிக முக்கியமாக, AI (செயற்கை நுண்ணறிவு), கல்வி, உற்பத்தி, கலாசார பரிமாற்றம், கடல்சார் பாரம்பரியம், விவசாய புதுமை, நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் இரு நாடுகளும் 'சிறப்பு உத்தியோகபூர்வ கூட்டுறவு' (Special Strategic Partnership) அளவுக்கு உறவை உயர்த்தியுள்ளன.
இதையும் படிங்க: இஸ்ரேல் பயணம் சக்சஸ்! நாடு திரும்பினார் மோடி! இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார்!!

வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இஸ்ரேலுடனான ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.
உயர் தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாறிவரும் உலகப் பொருளாதார சூழலில் வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்துவதிலும், மேற்கு ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் கூட்டுறவை வலுப்படுத்துவதிலும் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.
இந்தப் பயணம் இஸ்ரேலின் தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் நடந்ததால் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்தது. பிரதமர் மோடி அமைதி, மனிதநேயம், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை வலியுறுத்தினார். இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' மற்றும் 'நியூ மிடில் ஈஸ்ட்' கொள்கைகளுக்கு இணங்க, இஸ்ரேலுடனான உறவு பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொழில்நுட்ப பரிமாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, விவசாய புதுமைகள் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பிரதமர் மோடியின் இந்த வெற்றிகரமான பயணம் இந்தியாவின் வெளியுறவு வலிமையை மீண்டும் உலகுக்கு நிரூபித்துள்ளது!
இதையும் படிங்க: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மோடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நெதன்யாகு! இந்திய பாரம்பரிய உடையில் இஸ்ரேல் பிரதமர்!