வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக மதுரையில் நடைபெறவிருந்த இந்தக் கூட்டம், பாதுகாப்பு மற்றும் இடவசதி காரணங்களுக்காகச் சென்னைக்கு மிக அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக ஜி.எஸ்.டி சாலையை ஒட்டியுள்ள சுமார் 70 ஏக்கர் நிலப்பரப்பில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் இன்று முறைப்படி தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் இந்தக் கூட்டம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைத் தமிழக பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற பூமி பூஜையில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு பணிகளை முடுக்கிவிட்டனர். “2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய உத்வேகத்தைத் தரும்” என நிர்வாகிகள் தெரிவித்தனர். 23-ஆம் தேதி நடைபெறும் மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி தேர்தல் முழக்கத்தை முன்வைக்க உள்ளனர்.
முன்னதாக, மதுரையில் இந்தக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், டெல்லி மேலிடம் மற்றும் எஸ்பிஜி (SPG) பாதுகாப்புக் குழுவின் அறிவுறுத்தலின்படி சென்னைக்கு அருகில் உள்ள மாமண்டூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த இடம் வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. பிரதமர் மோடி வருகையையொட்டிச் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட உள்ளது. இந்தப் பொதுக்கூட்டம் தமிழகத்தின் அரசியல் திசையை மாற்றியமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் களத்தில் வேகம் காட்டும் இபிஎஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு! விரைவில் சுற்றுப்பயணம்!
இதையும் படிங்க: "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்" - டிசம்பர் 28-ல் இபிஎஸ் சூறாவளிப் பிரசாரம் தொடக்கம்!