தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பாமகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வரும் 19-ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் குறித்து அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக நடுநிலை வகித்த சூழலில், இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பல்லாவரத்தில் பாமகவின், நிர்வாகக் குழு கூட்டம் தொடர்பாக, வெளியாகியுள்ள அறிவிப்பில், வரும் மே 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனது மெஜாரிட்டியை நிரூபித்தபோது, பாமகவின் 5 எம்.எல்.ஏ-க்களும் நடுநிலை வகித்தனர். இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பின்வரும் விஷயங்கள் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது:
தமிழகத்தின் புதிய தவெக அரசுடன் பாமகவின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசிக்கவுள்ளார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் வரும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பாமகவின் அடுத்தகட்ட பொதுக்குழு மற்றும் மாநில மாநாடுகள் நடத்துவது குறித்தும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படலாம். இந்தக் கூட்டத்தில் பாமகவின் மாநில, மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
மாநில அரசியலில் தவெக-வின் வருகை மற்றும் அதிமுக-வின் பிளவு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள புதிய சூழலில், பாமக தனது தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முடிவுகள் இந்தக் கூட்டத்தில் தெரியவரும். "நடுநிலை" வகிக்கும் பாமகவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? உங்கள் கணிப்பை எங்களுடன் பகிருங்கள்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!