சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உடைந்து இரு அணிகளாக பிரிந்துள்ளது பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அணி ஜனவரி 7-ஆம் தேதி அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்தது.
இதை எதிர்த்து பாமக நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ், "பாமக தலைவர் நான் தான்; கூட்டணி பேச என்னுடன் தான் பேச வேண்டும்" என்று கடுமையாக கண்டித்தார். அன்புமணிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், ராமதாஸ் அணியை திமுக தலைமையிலான கூட்டணியில் இணைக்க பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல்.திருமாவளவனுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமதாஸ் தரப்பு திமுகவுடன் இணக்கமாக இருப்பதால், ஜி.கே.மணி மூலம் இந்த முயற்சி தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: அன்புமணியை தொடர்ந்து விமர்சிக்கும் ஜி.கே.மணி!! திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ பதவி பெற திட்டம்!
ஆனால் திமுக தரப்பில் ராமதாஸை கூட்டணியில் சேர்க்க தயக்கம் நிலவுகிறது. விசிக-பாமக தொண்டர்கள் களத்தில் இணைந்து செயல்படுவது கடினம் என்பதால், 2011 சட்டமன்றத் தேர்தலில் நடந்தது போல வன்னியர் மற்றும் பட்டியலினத்தவர் வாக்குகள் அதிமுக பக்கம் திரும்பிவிடும் அச்சம் உள்ளது.

திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கூட்டணியில் இல்லாவிட்டாலும் ஜி.கே.மணி திமுகவுடன் இணக்கமாக உள்ளார். ராமதாஸ் மீதும் முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை உள்ளது. ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் ராமதாஸை சேர்க்க விருப்பம் தான் உள்ளது. ஆனால் ராமதாஸ் வந்தால் எதிர்க்கட்சிகள் பழைய சம்பவங்களை (வன்னியர்-தலித் மோதல்கள்) கிளறி, வன்னியர் வாக்குகளை ஒன்றிணைக்க விசிகவினரை அன்புமணி ஆதரவாளர்கள் சீண்டுவர். இது தேவையற்ற சிக்கலை உருவாக்கும்" என்றார்.
ராமதாஸ் அணி திமுக கூட்டணியில் இணைந்தால் வன்னியர் வாக்கு வங்கி பெருமளவு திமுகவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விசிக உள்ளிட்ட தலித் அமைப்புகளுடன் இணைவது கடினமாக இருக்கும்.
ராமதாஸ் தரப்பு தற்போது தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜி.கே.மணி உள்ளிட்டோர் திமுகவுடன் பேச்சு நடத்தி வரும் நிலையில், வரும் நாட்களில் பாமக அணிகளின் இறுதி முடிவு தமிழக அரசியலை பெரிதும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: அன்புமணியின் சூழ்ச்சி! மனவேதனையில் ராமதாஸ்!! ஜி.கே. மணி கட் அண்ட் ரைட் பேச்சு!